Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பாடச்சுருக்கம் - ஜிம்னோஸ்பெர்ம்கள்

தாவரவியல் - பாடச்சுருக்கம் - ஜிம்னோஸ்பெர்ம்கள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

பாடச்சுருக்கம் - ஜிம்னோஸ்பெர்ம்கள்

தாவர உலகம் பாசிகள், பிரையோஃபைட்கள், டெரிபோஃபைட்கள் ஜிம்னோஸ்பெர்ம்கள் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம்களை உள்ளடக்கியுள்ளது.

பாடச்சுருக்கம்

தாவர உலகம் பாசிகள், பிரையோஃபைட்கள், டெரிபோஃபைட்கள் ஜிம்னோஸ்பெர்ம்கள் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம்களை உள்ளடக்கியுள்ளது.

தாவரங்களின் வாழ்க்கைச் சுழலில்

(1) ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கை சுழல்

(2) இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கை சுழல்

(3) ஒற்றை இரட்டைமடிய உயிரி வாழ்க்கை சுழல் என்ற மூன்று வகைகளும் அடங்கும்.

பாசிகள் பச்சையம் கொண்ட தற்சார்பு உயிரிகளாகும். இவற்றில் உடல், வேர், தண்டு, இலை என வேறுபாடு காணப்படவில்லை. உடல் அமைப்பில் அகன்ற வேறுபாடுகள் காணப்படுகிறது. துண்டாதல், கிழங்குகள், நகராவித்துக்கள் உருவாதல் போன்ற முறைகளில் உடல் இனப்பெருக்கத்தையும், இயங்குவித்துகள், சுயவித்துக்கள் ,ஹிப்னோவித்துகள் போன்றவற்றின் மூலம் பாலிலா இனப்பெருக்கத்தையும் மேற்கொள்கின்றன. ஒத்த கேமீட்களின் இணைவு, சமமற்ற கேமீட்களின் இணைவு, முட்டை கருவுறுதல், முறைகளில் பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது.

கேரா ஒரு நன்னீர் வாழ் பாசியாகும். இது கல்தாவரங்கள் எனப் பிரபலமாக அறியப்படுகிறது. தாவர உடலம் பல செல்களாலான, கண்களுக்குப் புலப்படும் மைய அச்சு மற்றும் வேரிகள் எனப் பிரித்தறியப்படும் உடலத்தைப் பெற்றுள்ளது. முட்டைக்கருவுறுதல் வழி பாலினப்பெருக்கும் நடைபெறுகிறது.

பிரையோஃபைட்கள் எளிமையான நிலத்தாவரங்களாகும். இவை தாவர உலகின் நிலநீர்வாழ்விகள் அல்லது வாஸ்குலத் திசுக்களற்ற பூவாத்தாவரங்கள் என அறியப்படுகின்றன. தாவர உடல் கேமீட்டக தாவரத் தலைமுறையைச் சார்ந்தது. வித்தகத்தாவரம் கேமீட்டக தாவரத்தைச் சார்ந்துள்ளது. கடத்து திசுவான சைலம், ஃபுளோயம் காணப்படுவதில்லை. துண்டாதல், வேற்றிட மொட்டுகள் உருவாதல், ஜெம்மாக்கள் போன்றவற்றின் மூலம் உடல் இனப்பெருக்கம் செய்கின்றன. பாலினப் பெருக்கம் முட்டை கரு இணைவு முறையில் நடைபெறுகிறது. கருவுறுதலுக்கு நீர் அவசியமானது.

மார்கான்ஷியா ஹெப்பாக்காப்சிடா எனும் வகுப்பைச் சார்ந்தது. உடலம் மேல்கீழ் வேறுபாடு பெற்று, வளர்தளத்தில் வேரிகளால் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. உடலத்தின் உள்ளமைப்பில் ஒளிச்சேர்க்கை பகுதி மற்றும் சேமிப்பு பகுதி எனப் பிரித்தறியப்படுகிறது. துண்டாதல், ஜெம்மாக்கள், உருவாகுதல் வழி தழை உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது. பாலினப்பெருக்கம் முட்டைக்கருவுறுதல் வழி நடைபெறுகிறது. வித்தகத்தாவரம் வித்துகளைப் பெற்றுள்ளது. சந்ததி மாற்றம் காணப்படுகிறது.

டெரிடோஃபைட்கள் வாஸ்குலத் திசுக்கள் கொண்ட பூவாத்தாவரங்கள் எனவும் அறியப்படுகிறது. தாவர உடல் வித்தகத்தாவர சந்ததியைச் சார்ந்தது, நீண்ட நாள் வாழக்கூடியன. வேர், தண்டு, இலை என வேறுபாடு அடைந்து காணப்படுகிறது. ஒத்தவித்து தன்மை அல்லது மாற்றுவித்து தன்மை உடையவை. வித்தக இலைகள் வித்துகள் கொண்ட வித்தகங்களைத் தாங்குகின்றன. வித்தக இலைகள் நெருக்கமாக அமைந்து கூம்பு அல்லது ஸ்ட்ரோபைலசை உருவாக்குகின்றன.

வித்துகள் முளைத்து ஒற்றைமடிய, பலசெல்களைக் கொண்ட, இதய வடிவ, தனித்து வாழும் திறன் படைத்த முன் உடலத்தை உருவாக்குகின்றன பாலினப்பெருக்கம் முட்டைகரு இணைவு முறையில் நடைபெறுகிறது. வாழ்க்கைச் சுழலில் சந்ததி மாற்றம் காணப்படுகிறது.

ஸ்டீல் என்பது சைலம், ஃபுளோயம், பெரிசைகிள் அகத்தோல் மற்றும் பித் ஆகியவற்றை உள்ளடக்கிய மைய உருளையாகும். புரோட்டோஸ்டீல் மற்றும் சைபனோஸ்டீல் என இருவகை ஸ்டீல்கள் காணப்படுகின்றன.

செலாஜினெல்லா லைக்காப்சிடா வகுப்பைச் சார்ந்தது. தண்டு, இலை, வேர்த்தாங்கி, வேர்கள் எனப் பிரித்தரியப்படும் உடலம் வித்தகத் தாவர உடலமாகும். மாற்றுவித்துத்தன்மை காணப்படுகிறது. நுண்வித்துகள், பெருவித்துகள் என இரண்டு வகையான வித்துகள் வித்தகங்களில் தோன்றுகின்றன. நுண்வித்தகங்கள் மற்றும் பெருவித்தகங்கள் வித்தக இலைகளில் தோன்றுகின்றன. வித்தகயிலைகள் ஒருங்கிணைந்து கூம்புகளாகின்றன. முட்டைகருவுறுதல் வழி பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது. சந்ததி மாற்றம் காணப்படுகிறது.

ஜிம்னோஸ்பெர்ம்கள் திறந்த விதைத் தாவரங்களாகும். தாவர உடல் ஓங்கிய வித்தகத் தாவரத் தலைமுறையைச் சார்ந்தது. வாழ்க்கைச் சுழலில் சந்ததி மாற்றம் காணப்படுகிறது.

சைகஸில் பவழ வேர்கள் காணப்படுகின்றன. பைனஸ் வேர்ப்பூஞ்சைகளைக் கொண்டுள்ளனது. மேலும் நெடுங்கிளை, குறுங்கிளை என இருவகைக் கிளைகளைக் கொண்டுள்ளன. பொதுவாக இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுகிறது. வித்துகள் கூம்புகளிலுள்ள வித்தகங்களில் உருவாகின்றன. மகரந்தக்குழாய் வழி கருவுறுதல் நடைபெறுகிறது. கருவூண் திசு ஒற்றைமடிய(n)மானது.

சைகஸ் சைக்கடாப்சிடா வகுப்பைச் சார்ந்தது. வித்தகத்தாவரத்தை சார்ந்த தாவர உடலம் சிறிய பனைமரம் போன்றது. ஆணிவேர்த் தொகுப்பைத் தவிரப் பவழவேர்களும் காணப்படுகிறது. ஒருபால் வகைத் தாவரமான சைகஸில் நுண்வித்தக இலைகள் ஒருங்கிணைந்து ஆண்கூம்புகளைத் தருகிறது. சூல்கள் தோன்றும் பெருவித்தக இலைகள் கூம்புகளாக அமைவதில்லை. கருவுறுதல் நடைபெற்றுக் கருமுட்டை தோன்றிக் கருவை உருவாக்குகிறது. சந்ததி மாற்றம் காணப்படுகிறது.

ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மிகவும் மேம்பாடு அடைந்த தாவரக்குழுமம் ஆகும். சூல்கள், சூற்பையால் சூழப்பட்டுள்ளதால் மூடுவிதைகள் கொண்டவை. மரங்கள், புதர்செடிகள், செடிகள், கொடிகள், வன்கொடிகள் எனப் பலதரப்பட்ட வளரியல்பைக் கொண்டவை. இரட்டைக் கருவுறுதல் நடைபெறுகிறது. மும்மடிய (3n) கரூவூண் திசு கொண்டவை. இருவிதையிலைத் தாவரங்கள், ஒருவிதையிலைத் தாவரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வாழ்க்கைச் சுழலில் சந்ததி மாற்றம் காணப்படுகிறது.

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்