Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | மார்கான்ஷியா - பிரையோஃபைட்கள்

தாவரவியல் - மார்கான்ஷியா - பிரையோஃபைட்கள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

மார்கான்ஷியா - பிரையோஃபைட்கள்

மார்கான்ஷியா குளிர்ந்த, ஈரப்பதம் நிறைந்த நிழலான இடங்களில் வளர்கின்றன. மார்கான்ஷியா பாலிமார்பா பொதுவாகக் காணப்படும் சிற்றினமாகும்.

மார்கான்ஷியா

வகுப்பு - ஹெப்பாட்டிகாப்சிடா

வரிசை - மார்கான்ஷியேல்ஸ்

குடும்பம் - மார்கான்ஷியேசி

பேரினம் - மார்கான்ஷியா

உங்களுக்குத் தெரியுமா?

பக்ஸ்பாமியா ஏபில்லா, - கிரிப்டோதாலஸ் மிராபிலிஸ் போன்றவை சாற்றுண்ணி வகை பிரையோஃபைட்களாகும்.

மார்கான்ஷியா குளிர்ந்த, ஈரப்பதம் நிறைந்த நிழலான இடங்களில் வளர்கின்றன. மார்கான்ஷியா பாலிமார்பா பொதுவாகக் காணப்படும் சிற்றினமாகும்.


கேமீட்டக தாவரம் (Gametophyte)

தாவர உடலம் கேமீட்டக தாவரத்தைச் சார்ந்தது. இது கவட்டை கிளைத்தல் கொண்ட, மேல்கீழ் வேறுபாடுடைய நிலம்படர் தாவரமாகும். உடலத்தில் மேற்புறத்தின் மையத்தில் நடுநரம்பால் ஏற்பட்ட தெளிவான, ஆழமான பள்ளம் காணப்படுகிறது. இப்பகுதியிலுள்ள சாய்சதுர அல்லது பலகோண வடிவப்பகுதி அடிப்பகுதியில் அமைந்துள்ள காற்றறைப் பகுதியின் வெளிக்கோடமைப்பை குறிப்பிடுகிறது. மேலும் உடலத்தின் மேல்பகுதியில் காணப்படும் பிறைவடிவ அமைப்புகள் ஜெம்மா கிண்ணங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை ஜெம்மாக்கள் எனப்படும் உடல இனப்பெருக்கப் பகுதிகளைக் கொண்டுள்ளன. நுனிமுடிச்சில் காணப்படும் நுனிசெல் உடலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கீழ்புறத்தில் பல செல்களாலான செதில்களும், வேரிகளும் காணப்படுகின்றன. இவை உடலத்தை நிலைநிறுத்தவும், நீர் மற்றும் கனிமங்களை உறிஞ்சவும் உதவுகின்றன. சம உறைவேரிகள் (smooth walled), உள்வளரி வேரிகள், என இருவகை வேரிகளைக் கொண்டுள்ளன.

உடலங்கள் முதிர்ச்சியடைந்ததும் நிமிர்ந்த ஆந்திரீடியத்தாங்கியையும் ஆர்க்கிகோனியத்தாங்கியையும் கொண்டுள்ளன.

உடலத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

குறுக்குவெட்டுத் தோற்றத்தில் மார்கான்ஷியாவின் உடலம் புறத்தோல், ஒளிச்சேர்க்கைப் பகுதி மற்றும் சேமிப்புப் பகுதி என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது (படம் 2.10).


மேற்புறத்தோல் மற்றும் கீழ்ப்புறத்தோல் காணப்படுகிறது. மேற்புறத்தோல் பசுங்கணிகங்கள் கொண்ட மெல்லிய சுவருடைய ஓரடுக்கு பாரங்கைமா செல்களால் ஆனது. இவ்வமைப்பில் பீப்பாய்வடிவ காற்றுத்துளைகள் தொடர்ச்சியற்றுக் காணப்படுகிறது. இத்துளைகள் காற்றறைகளுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளன. 4 முதல் 8 செல்கள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைத்தது போன்று அடுக்கமைவில் உள்ளன. மேற்புறத்தோலுக்குக் கீழ் பல காற்றறைகள் கிடைமட்ட அடுக்கில் அமைந்துள்ளது. மேற்புறத்தோலிலிருந்து காற்றறையின் அடிப்பகுதி வரை தோன்றும் செல்வரிசைகள் காற்றறைகளைப் பிரிக்கின்றன. காற்றறையின் தரைப்பகுதி எளிய அல்லது கிளைத்த பசுமையான இழைகளைக் கொண்டுள்ளது. இவை ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இப்பகுதியை அடுத்துச் சேமிப்புப் பகுதி காணப்படுகிறது. செல் இடைவெளிகளற்ற பாரங்கைமா செல்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன. தரசத்துகள்களும், புரதத்துகள்களும் இங்கு உள்ளன. கீழ்ப்புறத்தோல் வேரிகளையும் செதில்களையும் கொண்டுள்ளது.

இனப்பெருக்கம்

மார்கான்ஷியா உடல, பாலினப்பெருக்க முறைகளில் இனப்பெருக்கம் செய்கிறது.

உடல இனப்பெருக்கம்

உடலத்தின் தொடர்ச்சியான இறப்பு மற்றும் அழுகல், வேற்றிடக் கிளைகள் தோன்றுதல், ஜெம்மாக்கள் முளைத்தல் ஆகிய முறைகளில் உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது. உடலத்தின் இறப்பு மற்றும் அழுகல் மேற்பகுதியிலிருந்து தொடங்குகிறது. கவட்டை கிளைத்தலுற்ற பகுதியை அடையும் பொழுது உடலம் இருபகுதிகளாகப் பிரிகிறது. ஒவ்வொரு பகுதியும் தன்னிச்சையாக ஒரு புதிய உடலமாக வளர்கிறது. வேற்றிடக் கிளைகள் கேமீட்டகத்தாவரத்தின் கீழ்ப்புறத்திலிருந்து தோன்றுகின்றன. இக்கிளைகள் தாய் உடலத்திலிருந்து பிரிந்து தன்னிச்சையாகத் தனி உடலமாக வளர்ச்சியடைகின்றன. ஜெம்மாக்கள் உடல இனப்பெருக்கத்திற்கு உதவும் பல செல்களால் ஆன சிறப்பு உறுப்புகளாகும். இவை உடலத்தின் மேற்ப்பரப்பில் சிறு கிண்ணங்கள் போன்ற அமைப்புகளில் தோன்றுகின்றன. பொதுவாக ஆண், பெண் உடலத்திலிருந்து தோன்றும் ஜெம்மாக்கள் முறையே ஆண், பெண் கேமீட்டக உடலத்தைத் தருகின்றன (படம் 2.11).


பாலினப்பெருக்கம்

மார்கான்ஷியாவில் பாலின உறுப்புகள் சிறப்பு வகை குழித்தளங்களைக் கொண்ட கேம்மீட்டகத்தாங்கிகளில் தோன்றுகின்றன. ஆந்திரீடியத்தைத் தாங்கும் அமைப்பு ஆந்திரீடியத்தாங்கி என்றும், ஆர்க்கிகோணியங்களைத் தாங்கும் அமைப்பு ஆர்க்கிகோணியத்தாங்கி என்றும் அழைக்கப்படுகின்றன (படம் 2.12). மார்கான்ஷியா ஓர் ஒருபாலுடல வகையைச் சார்ந்தது. ஆண் மற்றும் பெண் தாங்கிகள் வெவ்வேறு தாவரங்களில் தோற்றுவிக்கப்படுகின்றன. பிரையோஃபைட்களின் பாலுறுப்பு பல செல்களால் ஆனது ஆண்பாலுறுப்பு ஆந்திரீடியம் என்று அழைக்கப்படுகிறது. இது இருகசையிழைகளைக் கொண்ட நகரும் ஆண் கேமீட்டுகளை உருவாக்குகிறது. பெண் பாலுறுப்பு ஆர்க்கிகோணியம் என்று அழைக்கப்படுகிறது. இது குடுவை வடிவைப் பெற்று, ஒரு முட்டையை உருவாக்குகிறது. கருவுறுதலுக்கு நீர் அவசியமானது. நகரும் ஆண்கேமீட்டுகள் வெளியேற்றப்பட்டு நீரில் நீந்தி ஆர்க்கிகோணியத்தால் சுரக்கப்படும் வேதிப்பொருளால் ஈர்க்கப்படுகிறது. பல நகரும் ஆண்கேமீட்டுகள் ஆர்க்கிகோணியத்தினுள் நுழைந்தபோதும், ஒரே ஒரு நகரும் ஆண்கேமீட் மட்டுமே முட்டையுடன் இணைந்து கருமுட்டையை உருவாக்குகிறது. கருமுட்டை வித்தகத்தாவர தலைமுறையின் முதல் செல்லாகும். கருமுட்டை பல செல்களுடைய அமைப்பான வித்தகத்தாவரத்தை உருவாக்குகிறது (படம் 2.13). வித்தகத்தாவரம் தனித்து வாழும் திறனற்றது. ஒளிச்சேர்க்கை திறனுடைய கேமீட்டகத்தாவரத்தோடு இணைந்து அதிலிருந்து ஊட்டப்பொருட்களை பெறுகிறது. வித்தகத்தாவரம் பாதம், சீட்டா, வெடிவித்தகம் (Capsule) என மூன்று பகுதிகளாகப் பிரித்தறியப்படுகிறது. பாதம் குமிழ்போன்ற அமைப்பைப் பெற்றுக் கேமீட்டகதாவரத்தில் புதைந்துள்ளது, இது கேமீட்டகத்தாவரத்திலிருந்து ஊட்டத்தை எடுத்து வித்தகத் தாவரதிதற்கு கடத்துகிறது. குட்டையான சீட்டா பாதத்தையும் வெடிவித்தகத்தையும் இணைக்கிறது. வெடிவித்தகம் ஓரடுக்காலான பாதுகாப்பு மேலுறையைப் பெற்றுள்ளது. வெடிவித்தகம் எண்ணற்ற எலேட்டர்களையும் ஒற்றைமடிய வித்துகளையும் கொண்டுள்ளது. வெடிவித்தகம் ‘மூடுகவசம்’ (Calyptra) எனப்படும் பாதுகாப்பான உறையால் சூழப்பட்டுள்ளது. முதிர்ந்த வெடிவித்தகம் வெடித்து வித்துகள் வெளியேற்றப்படுகின்றன. எலேட்டர்கள் வித்துகள் பரவுதலுக்கு உதவி செய்கின்றன.


சாதகமான சூழ்நிலைகளில் வித்துகள் முளைத்துப் புதிய கேமீட்டகத்தாவரமாக வளர்கிறது. மார்கான்ஷியாவின் வாழ்க்கைச் சுழற்சியில் ஒற்றைமடிய கேமீட்டகதாவர நிலையும், இரட்டைமடிய வித்தகத் தாவர நிலையும் மாறிக் மாறி காணப்படுவதால் சந்ததி மாற்றம் உள்ளது (படம் 2.14).


11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்