Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சுட்ட சுண்ணாம்பு (CaO) : தயாரித்தல், பண்புகள், பயன்கள்

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

சுட்ட சுண்ணாம்பு (CaO) : தயாரித்தல், பண்புகள், பயன்கள்

கால்சியம் ஆக்ஸைடுடன் நீர் சேர்க்கப்பட்டு கால்சியம் ஹைட்ராக்சைடு தயாரிக்கப்படுகிறது.

சுட்ட சுண்ணாம்பு (CaO)


தயாரித்தல்

வணிக ரீதியில் சுண்ணாம்புக் கல்லை, சுண்ணாம்புக் களவாயில் 1070 - 1270K வெப்பநிலை எல்லையில் வெப்பப்படுத்துவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது.

CaCO3 ⇌ CaO + CO2

இவ்வினை ஒரு மீள் வினையாதலால், வினையினை முற்றிலும் நிகழ்த்த ஏதுவாக, வினையில் உருவாகும் கார்பன்டையாக்சைடு உடனுக்குடன் நீக்கப்படுகிறது.


பண்புகள்

கால்சியம் ஆக்சைடு வெண்மைநிற படிக உருவமற்ற திண்மம்.

1. இதன் உருகு நிலை 2870 K. காற்றில் வைக்கப்படும் போது, கார்பன்டையாக்சைடு மற்றும் ஈரப்பதத்தினை உறிஞ்சுகிறது.

CaO + H2O → Ca(OH)2

CaO + CO2 → CaCO3

2. குறைந்தளவு நீரினைச் சேர்க்கும்போது, கால்சியம் ஆக்சைடு கட்டிகள் உடைக்கப்படுகின்றன. இச்செயல் சுண்ணாம்பை நீர்க்கச் செய்தல் என்றும் உருவாகும் வினைபொருள் நீற்றுச் சுண்ணாம்பு எனவும் அழைக்கப்படுகிறது. 

CaO + H2O → Ca(OH)2


படம் 5.10. சுட்ட சுண்ணாம்பு தயாரித்தல்

3. சுட்ட சுண்ணாம்பு, மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு சேர்ந்த கலவை சோடாச் சுண்ணாம்பு எனப்படுகிறது

4. இது SiO2 மற்றும் P4O10 ஆகிய அமில ஆக்ஸைடுகளுடன் சேர்ந்து முறையே CaSiO3 மற்றும் Ca3 (PO4)2 ஆகியவற்றைத் தருகின்றது.

CaO + SiO2 → CaSiO3

6 CaO + P4O10 → 2 Ca3 (PO4)2 


பயன்கள்

கால்சியம் ஆக்சைடானது,

1. சிமெண்ட், கட்டுமான பூச்சுகள் மற்றும் கண்ணாடித் தயாரிப்பில் பயன்படுகிறது.

2. சோடியம் கார்பனேட் மற்றும் நீற்றுச் சுண்ணாம்பு தயாரித்தலில் பயன்படுகிறது.

3. சர்க்கரை தூய்மையாக்கலில் பயன்படுகிறது.

4. உலர்த்தும் வினைபொருளாகப் பயன்படுகிறது.


11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்