Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | இலக்கணம்: யாப்பு இலக்கணம்

இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: யாப்பு இலக்கணம் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

இலக்கணம்: யாப்பு இலக்கணம்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : இலக்கணம்: யாப்பு இலக்கணம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் எட்டு

கற்கண்டு

யாப்பு இலக்கணம்

பாவலர்கள் தம் உள்ளத்தில் தோன்றும் உயர்ந்த கருத்துகளைப் பாடல்களாகப் படைக்கின்றனர். குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை மரபுக்கவிதைகள் என்பர். இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர். மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம் எனப்படும்.

யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு. அவை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பனவாகும்.

எழுத்து

யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை மூன்றாகப் பிரிப்பர்.

அவையாவன:

குறில் - உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்

நெடில் - உயிர்நெடில், உயிர்மெய் நெடில்

ஒற்று - மெய்யெழுத்து, ஆய்த எழுத்து

அசை

எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது அசை. அது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.

(எ.கா.) ந,நம்,நா,நாம்.

இரண்டு குறில்எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.

(எ.கா.) கட,கடல்,கடா, கடாம்.

சீர்

ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது சீர்.

சீர்களை ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என வகைப்படுத்துவர்.

தளை

சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர். முதல் சீரின் இறுதியிலும் வரும்சீரின் முதலிலும் உள்ள அசைகள் எவ்வகை அசைகள் என்பதன் அடிப்படையில், தளைகள் ஏழு வகைப்படும்.

அடி

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைச் கொண்டு அமைவது அடி ஆகும். அடி ஐந்து வகைப்படும்.

தொடை

செய்யுளில் ஓசைஇன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும். தொடை எட்டு வகைப்படும். முதன்மையான தொடைகள் வருமாறு:

1. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.

2. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.

3. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.

4. ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை.

பாவகைகள்

பா நான்கு வகைப்படும். அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.

வெண்பா செப்பல் ஓசை உடையது. அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை.

ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது. சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை.

கலிப்பா துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது.

வஞ்சிப்பா தூங்கல் ஓசை உடையது.

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்