Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள்

இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் எட்டு

உரைநடை உலகம்

அயோத்திதாசர் சிந்தனைகள்


நுழையும்முன்

ஒருவருடைய வாழ்க்கை என்பது பிறந்து, வாழ்ந்து, மறைவதோடு முடிந்துவிடுவதில்லை. நேர்மையான சிந்தனையும் செயலும் ஒருவருக்கு வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றுத்தருகின்றன. ஒரு காலத்தில் மக்களின் மனத்தில் நின்றவர்கள் பிற்காலத்தில் மக்கள் நினைவிலிருந்து மறைந்துபோகின்றனர். காலவெள்ளத்தில் மக்களால் மறக்கப்பட்டு, பின்னர் நினைவுக்கு வரும் சிந்தனையாளர்களும் உண்டு. அத்தகைய சிந்தனையாளர் ஒருவரைப் பற்றி அறிவோம்.


அயோத்திதாசர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர். இவர் பண்டைய இலக்கிய, சமூக, சமய, வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டார். அவற்றின் அடிப்படையில் புதிய சமுதாயத்தைக் கட்டமைக்கும் பெரும்பணியில் ஈடுபட்டார். சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஆவர், இவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாசர்.

நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, உவப்பான எழுத்து, பாராட்டத்தக்க உழைப்பு ஆகிய ஐந்து பண்புகளையும் ஒருசேரப்பெற்ற சிந்தனையாளர்தான் அயோத்திதாசர். இவரைத் தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றுவர்.

வாழ்க்கை

அயோத்திதாசர் 1845ஆம் ஆண்டு மே திங்கள் இருபதாம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும். இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதால் பள்ளிப்பருவத்தில் பல இன்னல்களுக்கு உள்ளானார். அயோத்திதாசப் பண்டிதர் என்பவரிடம் இவர் கல்வியும் சித்தமருத்துவமும் பயின்றார்; தம்மீது அன்பு காட்டிய அந்த ஆசிரியரது பெயரையே தமது பெயராக வைத்துக்கொண்டார். நீலகிரிக்குச் சென்று அங்கு வாழ்ந்த அயோத்திதாசர், திருமணத்திற்குப் பிறகு பர்மாவுக்குச் சென்றார். அங்குக் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவந்த தமிழர்களின் உரிமைகளுக்காக இவர் பாடுபட்டார். பின்னர் இவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பி ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார்.


சிந்தனைகளின் அடித்தளம்

அயோத்திதாசர் தமிழ் மட்டுமன்றி, பாலி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சிபெற்றிருந்தார்; இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத்தத்துவம் உள்ளிட்ட பல்துறை நூல்களையும் ஆழ்ந்து கற்றார். இத்தகைய ஆழ்ந்த படிப்பே அவரது புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது.

இதழ்ப்பணி

1907ஆம் ஆண்டு சென்னையில் ஒருபைசாத்தமிழன் என்னும் வாரஇதழை காலணா விலையில் தொடங்கினார். ஓர் ஆண்டிற்குப்பின் அவ்விதழின் பெயரைத் தமிழன் என மாற்றினார். உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இவ்விதழின் நோக்கம் என்று அயோத்திதாசர் குறிப்பிட்டார். இவர் ''தமிழன்' இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமன்றி மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார். இவர் தமது நூல்கள் மூலமாகவும் தமது சீர்திருத்தச் சிந்தனைகளை வெளியிட்டார்.

கல்விச் சிந்தனைகள்

ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிபெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று அயோத்திதாசர் கருதினார். நிலவு நாளும் வளர்ந்து முழுநிலவாகி ஒளிவீசுவதுபோல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்படவேண்டும்; கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம்வளர்த்தல் போன்றவற்றையும் சுற்கவேண்டும் என்று இவர் வலியுறுத்தினார். சங்ககாலப் பெண்களைப்போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையைப் பெறவேண்டும் என்றும் இவர் எடுத்துரைத்தார்.

தெரிந்து தெளிவோம்

அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள்

போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்திரனச் சுருக்கம், பாலவாகடம்.

வாழும் முறை

மக்கள் வாழவேண்டிய முறை பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் சிறப்பானவையாகும். மக்கள் அனைவரும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் அன்புகொண்டு வாழவேண்டும்: கோபம். பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்விலிருந்து நீக்கி வாழவேண்டும்; பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது; மேலும் மதியை அழிக்கும் போதைப்பொருள்களைக் கையாலும் தொடுதல் கூடாது; ஒரு குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் நிறைந்தால், அக்குடும்பம் வாழும் ஊர் முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும்; ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத் திகழும்; இத்தகைய நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும் என்பவை அயோத்திதாசர் கருத்துகள்,

தெரிந்து தெளிவோம்

என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்.

- தந்தை பெரியார்

தலைமைத் தகுதி

ஒரு நாட்டுக்கு வழிகாட்டும் தலைவர் எத்தகையவராக இருக்கவேண்டும். என்பதை அயோத்திதாசர் விளக்குகிறார். 'மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கனவாக இருக்கவேண்டுமானால், அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி அமையவேண்டும். அவர் மக்களுள் மாமனிதராக, அறிவாற்றல்பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட தலைவரை வணக்கத்திற்கு உரியவராக மக்கள் ஏற்பார்கள்; கடவுளெனத் துதிப்பார்கள்' என்பது அயோத்திதாசர் கருத்து.

மக்களும் மழையும்

மக்களையும் மழையையும் தொடர்புபடுத்தி அயோத்திதாசர் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கதாகும். 'வானம் பொய்ப்பதற்குக் காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே. ஞானிகள் இல்லாமைக்குக் காரணம் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையாகும். அறிவாளிகள் இல்லாமைக்குக் காரணம் ஆட்சித்திறனும் அன்பும் உடைய அரசர்கள் இல்லாமையே. அத்தகைய அரசர்கள் இல்லாமைக்குக் காரணம் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை ஆகியன உடைய குடிகள் இல்லாமையே என்று கூறுவதன்மூலம் நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது' என்கிறார் அயோத்திதாசர்.

தெரிந்து தெளிவோம்

அயோத்திதாசர் எழுதிய நூல்கள்

புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா முதலியன.

திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.

சமத்துவம்

அயோத்திதாசர், மக்கள் அனைவரும் சமஉரிமை பெற்றுச் சமத்துவமாக வாழவேண்டும் என்று விரும்பினார். கல்வி, வேளாண்மை, காவல்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கவேண்டும்; ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றிலும் எல்லா வகுப்பினருக்கும்  உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்;  இவற்றில் இந்து, பௌத்தர், கிறித்துவர்,  இசுலாமியர், ஆங்கிலோ இந்தியர்,  ஐரோப்பியர் போன்ற அனைவருக்கும் வாய்ப்பளிக்கவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவந்தார் அயோத்திதாசர்.

 தெரிந்து தெளிவோம்

சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

திராவிட மகாஜன சங்கம்

அயோத்திதாசர் தமது கொள்கைகளை வலியுறுத்தவும் ஒடுக்கப்பட்டோர். உரிமைகளைப் பாதுகாக்கவும் 1892 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார், இவ்வமைப்பு சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் பராமரித்தல், குடிகளின் பாதுகாப்புக்குக் காவல்துறையினரை நியமித்தல், பொதுமருத்துவமனைகள் அமைத்தல், சிற்றூர்கள்தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காகவும் போராடியது.

அரசியல் விடுதலையும் மக்கள் உரிமையும்

விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையவேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து. சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது; மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமையவேண்டும். மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது என்று ஆணித்தரமாகக் கூறினார் அயோத்திதாசர்.

தனித்தன்மை

அயோத்திதாசர் காலத்தில் பண்டிதர், புலவர், நாவலர், பேச்சாளர், எழுத்தாளர் எனப் பலர் இருந்தனர். ஆயினும், பகுத்தறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறைகொண்டு புதிய சிந்தனைகளை விதைத்தவர் அயோத்திதாசரே. எனவே, அவரை அன்றைய தமிழர்கள் தனித்தன்மை உடைய சிந்தனையாளராக மதித்தனர்.

அயோத்திதாரின் சிந்தனைகள் ஒரு தனிமனிதரின் சிந்தனைகளாக மட்டும் அமையாமல், அகன்ற சமுதாயத்தில் விழிப்புணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் சித்தாந்தங்களாக விளங்கின என உறுதியாகக் கூறலாம்.

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்