Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: ஒன்றே குலம்

திருமூலர் | இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஒன்றே குலம் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

கவிதைப்பேழை: ஒன்றே குலம்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : கவிதைப்பேழை: ஒன்றே குலம் - திருமூலர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் எட்டு

கவிதைப்பேழை

ஒன்றே குலம்


நுழையும்முன்

மனிதர்களிடையே பிறப்பால் உயர்வுதாழ்வு பாராட்டுவது தவறானது. உலகமக்கள் அனைவரையும் உடன்பிறந்தாராகக் கருதி அன்புகாட்ட வேண்டும். பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றைப்போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும். அதுவே இறைத்தொண்டாகும். இக்கருத்துகளை விளக்கும் திருமூலரின் பாடல்களை அறிவோம்.

*ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே

 

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே*

- திருமூலர்

 

சொல்லும் பொருளும்

நமன் - எமன்

சித்தம் - உள்ளம்

நம்பர் - அடியார்

நாணாமே - கூசாமல்

உய்ம்மின் - ஈடேறுங்கள்

ஈயில் - வழங்கினால்

படமாடக்கோயில் - படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

 

பாடலின் பொருள்

மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை. கூசாமல் செல்லவேண்டிய நல்வழி இதைவிட வேறு இல்லை. உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின் இவற்றை நினைத்து ஈடேறுங்கள்.

படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

 

நூல் வெளி


அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினென் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் திருமூலர் இவர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. எனவே, இந்நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர். இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

திருமந்திரம் என்னும் நூலிலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்