Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: மெய்ஞ்ஞான ஒளி

குணங்குடி மஸ்தான் சாகிபு | இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: மெய்ஞ்ஞான ஒளி | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

கவிதைப்பேழை: மெய்ஞ்ஞான ஒளி

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : கவிதைப்பேழை: மெய்ஞ்ஞான ஒளி - குணங்குடி மஸ்தான் சாகிபு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் எட்டு

கவிதைப்பேழை

மெய்ஞ்ஞான ஒளி


நுழையும்முன்

எப்படியும் வாழலாம் என்பது விலங்குகளின் இயல்பு. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனிதப் பண்பு. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிஞர்கள் பலர் எடுத்துக் கூறியுள்ளனர். ஐம்பொறிகளின் ஆசையை அடக்கி, அறிவின் வழியில் சென்றால் வாழ்வாங்கு வாழலாம். அவ்வாறு வாழ வேண்டிய முறைகளை விளக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்கனை அறிவோம்.

 

கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு

உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே!

 

காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத

ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே!

 

அறிவை அறிவோருக்கு ஆனந்த வெள்ளமதாய்க்

கரையறவே பொங்கும் கடலே பராபரமே!

 

அடக்கத் தாம்மாய ஐம்பொறியைக் கட்டிப்

படிக்கப் படிப்பு எனக்குப் பகராய் பராபரமே!

- குணங்குடி மஸ்தான் சாகிபு

 

சொல்லும் பொருளும்

பகராய் - தருவாய்

ஆனந்த வெள்ளம் - இன்பப்பெருக்கு

பராபரம் - மேலான பொருள்

அறுத்தவருக்கு - நீக்கியவர்க்கு

 

பாடலின் பொருள்

மேலானபொருளே! தம் தீய எண்ணங்களை அடியோடு அழித்தவர்கள் மனத்துள்ளே எழுந்தருளி இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே! உன் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல், பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.

நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய். மேலானபொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள்செய்வாயாக.

 

நூல் வெளி

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர். இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார். சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார். எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்